விஜய் படத்தில் மீண்டும் மூன்று கதாநாயகிகள்

சினிமா

தெறி, மெர்ச்சல் ஆகிய படங்களுக்கு பிறகு அட்லியுடன் 3-வது முறையாக நடிகர் விஜய் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவரை தவிர மேலும் 2 கதாநாயகிகள் படத்தில் நடிப்பார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளது. கால்பந்தாட்ட விளையாட்டு தொடர்பான கதை இது. இதில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். எனவே சமீபத்தில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக வெளியான கனா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதில் சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல் மற்றொரு கதாநாயகியாக 96 மற்றும் பேட்ட படங்களின் மூலம் ரசிகர்களை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ள திரிஷா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அட்லி படங்களில் 3 கதாநாயகிகள் நடிப்பது வாடிக்கையானது. தெறி படத்தில் சமந்தா, எமிஜாக்சன், சுனைனா ஆகியோர் நடித்திருந்தனர். மெர்ச்சல் படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். எனவே இந்த படத்திலும் 3 கதாநாயகிகள் நடிப்பார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பெரம்பூர் பின்னி மில்லில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இன்று முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விஜய் தொடர்பான காட்சிகள் இன்று முதல் படமாக்கப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைக்கிறார்.