நேப்பியர், ஜன.21: ஆஸ்திரேலிய தொடரை வரலாற்று சாதனையுடன் வென்ற கையோடு நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு, அந்த அணியுடனான போட்டி கடும் சவாலாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடர் குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதாவது: தற்போது அபாரமான ஃபார்மில் உள்ள நியூசிலாந்து அணியை லேசாக எடை போட்டுவிடமுடியாது. அந்த அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் போட்டியின் முடிவை தனித்து நின்று மாற்றும் திறன் பெற்றவர்களாய் உள்ளனர்.

மேலும், சொந்த மண்ணில் வீழ்ந்த ஆஸ்திரேலியாவை போல, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், கடந்த 2015 உலகக்கோப்பைக்கு பின்னர், அந்த அணி தன் சொந்த மண்ணில் ஆடிய 27 போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்து பலம்வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம், தற்போது ஃபார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை வைத்துகொண்டு, இந்திய அணியின் பலத்த எடைப்போட முடியாது. எனவே, இந்திய அணியின் பலத்தை நிரூபிக்கும் (பரிசோதிக்கும்) போட்டியாக நியூசிலாந்து தொடர் அமையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.