சென்னை, ஜன.22: தமிழக அரசு நடத்தும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது.

நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசுவார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதலீட்டாளர்களை வரவேற்று உரையாற்றுவார்.

இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் தேசிய மற்றும் பன்னாட்டு தொழில் கூட்டமைப்புகள், தூதரக பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான தொழில் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்படுகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 2 மணிக்கு முதலீட்டு கருத்தரங்கங்களும், வெளிநாட்டு கருத்தரங்கங்களும் பல்வேறு தலைப்புகளில் கீழ் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு கருத்தரங்கத்துக்கும் தலா ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டின் 2-வது மற்றும் நிறைவு நாளான 24-ந் தேதி காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் மாலை 3 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

முக்கிய நிகழ்வாக தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்த 2 நாள் மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.98 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் வரை சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் ஆங்காங்கே, மாநாடு தொடர்பான விளம்பரங்கள் முதலீட்டாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.