சென்னை, ஜன.22: கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னர் மாளிகை முன்பு திமுக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 14-ந் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பத்திரிகையாளர் மேத்யூ வெளியிட்ட கொடநாடு நிகழ்வுகள் குறித்து மனு அளித்தோம். இன்று வரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கவர்னர் அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி 24-ந் தேதி காலை 10 மணியளவில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு சென்னை மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.