சென்னை, ஜன.23:வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடு களை ஈர்ப்பதில் தமிழகம் மற்ற மாநி லங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு இன்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த மாநாட்டில் ஜப்பான் பிரதிநிதி பேசுகையில்:அக்டோபர் மாதம் முதல் சென்னையிலிருந்து ஜப்பாம் ஏர்லைன்ஸ் சேவை சென்னையிலிருந்து டோக்கியோவிற்கு தொடங்கும் என தெரிவித்தார்,

அதானி குழும சிஇஓ கரண் அதானி பேசுகையில்: இந்தியாவில் தொழில் தொடங்க தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் அதானி குழுமம், 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இதை தொடர்ந்து குளோபல் மோட்டார்ஸ் டெக்னாலஜியின் புதிய அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைத்து பேசியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2015-ம் ஆண்டில் நடத்திய முதலாவது உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. அந்த மாநாட்டின் மூலம் பல்வேறு தொழில்கள் தொடங்கப்படுவது வெவ்வேறு நிலைகளில் உள்ளது.

ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு திட்டங்களால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை அறவே இல்லாத நிலை உருவானதுடன், மின் மிகை மாநிலமாகவும் தமிழகம் மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள் கட்டமைப்பு உற்பத்தி, சேவை துறைகளில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 250 ஏக்கரில் பாதுகாப்பு தளவாட தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மனித வளம், தொழில் திறமை சிறந்து விளங்குகிறது. அதனால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

தொழில் வளர்ச்சியில் தமிழகம் நாட்டிலேயே 2-வது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.