சென்னை, ஜன.23: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில், அரசு செலவில் நினைவிடம் அமைக்க தடைகோரி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.

அரசு தரப்பில், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கைவிட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும், இன்றைய தேதியில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. அவருக்கு நினைவிடம் கட்டுவதென அரசு, தன் அதிகார வரம்புக்கு உட்பட்டுதான் முடிவெடுத்துள்ளது.
மாநில கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்டப்படுகிறது. இதன் பணிகள் மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு, திறக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது .

இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டி ருந்தது. இந்த வழக்கில், நீதிபதிகள் இன்று தீர்ப்பு கூறினர். அதில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி கிடையாது. தீர்ப்புக்கு முன்னதாகவே, அவர் இறந்து விட்டதால், அவருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கவில்லை. ஆகவே, நீதிமன்றத்தால், தண்டிக்கப்படாத ஒருவருக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டுவதில் தவறு இல்லை. மேலும் நினைவிடம் கட்டுவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். எதிர்காலத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் போது கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் கட்டுவது என முடிவெடுக்க வேண்டும். கட்டுமான பணிகளுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று
நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.