புதுடெல்லி, ஜன.23:ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்முறையாக பிரியங்காவுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய பொதுச் செயலாளராக செயல்பட உள்ள பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கு பொறுப்பு வகிப்பார் என்று கட்சி அறிவித்துள்ளது.

கடந்த தேர்தல்களின் போது சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி, ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்து வந்தார். கட்சியில் பொறுப்பு எதுவும் ஏற்காமல் இருந்து வந்த பிரியங்காவுக்கு முதல் முறையாக தற்போது பதவி அளிக்கப்பட்டுள்ளது.