சென்னை, ஜன.23:பிஜேபி கூட்டணியில் அதிமுக சேர வேண்டும் என்று மத்திய அமைச்சர் அத்வாலே தெரிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்து என்றும், அதிமுக எல்லா விஷயத்திற்கும் ஜால்ரா அடிக்காது என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் அளித்த பேட்டியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், அமமுகவும் சேர வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அத்வாலே தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பிஜேபியைச் சேர்ந்தவர் அல்ல; பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார். அது பிஜேபி தலைமையின் கருத்து அல்ல. பிஜேபியை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே; அது அதிமுகவின் கருத்து அல்ல.

தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.தமிழகத்திற்கு நல்லது செய்பவர் களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை.இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் கூறியிருப்பது போல் அதிமுகவுடன் அமமுக ஒருபோதும் சேராது. நாங்கள் துரோகிகளை விட்டு விலகிவந்துவிட்டோம். பிஜேபி கூட்டணியிலும் சேர மாட்டோம் என்றார்.