சென்னை, ஜன.24: கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுக மாவட்ட செயலாளர்கள் உட்பட 1,500 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைக்கும், அதைத் தொடர்ந்து நடந்த மர்ம மரணங்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். மேலும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜ்-ம், சயனும் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்குமாறு கூறியது முதல்வர்தான் என பரபரப்பு பேட்டி அளித்தனர். இதை முதல்வர் பழனிச்சாமி மறுத்ததுடன், தன்னை அரசியலில் எதிர்கொள்ள முடியாமல் கோழைத்தனமாக இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விடுகின்றனர் என்றார்.

இதனையடுத்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக பழனிச்சாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நேர்மையான விசாரணை நடைபெற முதல்வர் பதவியிலிருந்து அவரை விலகிட அறிவுறுத்தவும், நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்காதததை அடுத்து, 24-ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சைதாப்பேட்டையிலிருந்து, கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி திமுகவினர் பேரணியாக சென்றனர். கிண்டி அருகே வந்த இவர்களை, வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர்கள் அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் மற்றும் வாகை சந்திரசேகர், தாயகம் கவி ஆகிய எம்.எல்.ஏக்கள் உட்பட 1,500 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றதால், அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.