நேப்பியர், ஜன.24: நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவின் அபார சதத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, நேப்பியரில் உள்ள மெக்லியான் மைதானத்தில் இன்று நடந்தது.

ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று விளையாடிய அதே மைதானத்தில் இன்று பெண்கள் கிரிக்கெட் அணி களம் கண்டது. மைதானத்தின் ராசியோ, என்னவோ, ஆண்கள் அணியை போன்றே நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியும், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.4 ஓவர்களில் 192 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சரணாகதியானது. அடுத்து களமிறங்கிய இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனாவின் (105) அபார சதத்தால் 33 ஓவர்களிலேயே இலக்கை எட்டி (193) ஒரு விக்கெட்டை மட்டும் விட்டுகொடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மந்தனா அபார சதம்:
இந்தியாவின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 104 பந்துகளில் 105 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதில், 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிவரை அவுட் ஆகாமல் நின்றுக்கொண்டிருந்த வேளையில், துரதிஷ்டவசமாக கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தனது அபார சதத்தால் நியூசிலாந்தை ஆட்டம் காண வைத்த மந்தனா, ஆட்ட நாயகியாக தேர்வானார்.