புதுடெல்லி, ஜன.25: நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவின் போது டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகளை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் லஜ்பத் நகர், கிழக்கு டெல்லி உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்த இருவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,இருவரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் கனி மற்றும் ஹிலால் என்று தெரியவந்தது. குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது வடக்கு டெல்லியின் எரிவாயு பைப் லைன், லஜ்பத் நகர், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்கள், பாரம்பரியச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல்களில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததும், அதற்காக இருவரும் உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.