சென்னை, ஜன.25: குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:69-வது குடியரசு தின விழாவை யொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாளை நினைவு கூறும் வகையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாட்டின் எஜமானர்கள் மக்களே என்ற ஜனநாயகத்தின் தத்துவத்தை நமக்கு நினைவுப்படுத்தும் வகையில் இந்த நாள் அமைந்துள்ளது. இந்த நாளில் நம்மிடமுள்ள வளங்கள் அனைத்தையும் முழுமையாக பயன் படுத்தி, தொழில்நுட்பத்தின் வழி காட்டுதலுடன் உண்மையான உணர்வுடன் சாதாரண மக்களின் மீதான முழு அக்கறையுடன் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதியேற்போம்.

நமது அரசியல் சாசனத்தின் உணர்வு நாட்டின் உயிர்மூச்சாக நமக்கு ஊக்கமாக விளங்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவ்வாறு கவர்னர் கூறியிருக்கிறார்.