சென்னை, ஜன.25: குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குடியரசு தினவிழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கவும் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சென்னையில் நாளை குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை, காமராஜர்
சாலை முழுவதும் 5,000 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் மகேஷ்குமார், தினகரன் மற்றும் இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் கடற்கரை முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோக, சென்னையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்ட்ரல்-எழும்பூர் ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் நோக்கில் இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத ஊடுறுவலை தடுக்கும் நோக்கில் தமிழக எல்லைகளில் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கடும்
சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றன. விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.