புதுடெல்லி, ஜன.25:கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு2017 ஏப்ரலில் அவருக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை நடைபெற்றது.

இச்சம்பவத்தின்போது காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையில் ஈடுபட்ட கார் ஓட்டுனரும், மற்றொருவரின் மனைவியும், மகளும் சாலை விபத்துக்களில் அடுத்தடுத்து இறந்தனர்.

சிசிடிவி ஆபரேட்டர் தற்கொலை செய்துகொண்டார். இதில் மர்மங்கள் அடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரை தொடர்புபடுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி கோகாய் கூறுகையில், சிலர் முதலமைச்சர் மீது புகார் கூறியிருக்கிறார்கள். அவர் நான் தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டார்.

மேலும், டிராபிக் ராமசாமியின் மனுவில் போதிய தகவல்கள் இல்லை என்பதால் சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கொள்ளையில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் ஊட்டி நீதி மன்றத்தில் வரும் 29-ம் தேதி ஆஜராக உள்ளனர்.

இவர்களது ஜாமீன் ரத்து செய்யப்படுமா என்பது அப்போது தெரியவரும். மேலும், முதலமைச்சருக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்ட பத்திரிகையாளர் சாமுவேல் மாத்யூ, தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். –