சென்னை, ஜன.25:திமுக அறக்கட்டளையில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்பதை நிரூபித்தால் மோடி முன்னிலையில் பிஜேபியில் சேருகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

தமிழக பிஜேபி இளைஞர் அணியை சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா என்பவர் வாரிசு அரசியல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.தி.மு.க. ஆதரவாளர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாரிசு அரசியலை சேர்ந்தவர்கள் என்பதை மறைக்கிறார்கள். இவர்கள் வரிசையில் தமிழிசை சேரவில்லை.

அவர் வேறு பாதையை தேர்ந்தெடுத்து பா.ஜனதாவில் இணைந்தார்.தி.மு.க, காங்கிரஸ் தலைமை வாரிசு நிறுவனங்களாகி உள்ளன. அந்த கட்சிகள் ஒரு கம்பெனி. பிஜேபியில் வாரிசு அரசியல் இருந்தாலும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை கட்டுப்படுத்தும் தி.மு.க. அறக்கட்டளைக்கு உதயநிதி அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை நியாயப்படுத்தும் மக்களுக்கு இது புதியது.இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் “நான் தி.மு.க டிரஸ்ட்டில் அறங்காவலராக இருப்பதை நிரூபித்தால் உங்கள் மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்துவிடுகிறேன். அது தான் மிகமோசமான தண்டனையாக இருக்கும். உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.