சென்னை, ஜன.26: சிறப்பாக பணியாற்றிய தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்ணா பதக்கங்களை வழங்கினார். 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில், பள்ளி, கல்லூரி மாணவிகளின் சதக் நடனம், கிராமிய நடனம், கும்மிநடனம், பொய்க்கால் குதிரை, கரகம் நடனத்தை ஆடினர். அதே போன்று தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்  சார்பில் ராஜஸ்தான் சக்ரி நடனம், தெலுங்கானா குஸ்சாடி நடனம், மேகாலயா வாங்காளா நடனம் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை சார்பில் கைச்சிலம்பாட்டம் போன்ற கண்கவர்கலை நிகழ்ச்சிகளை கவர்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து தமிழக  அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. முதல் வாகனமாக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் வாகனம் அணி வகுத்தது, இதன் பின்னர் சென்னை மெரீனா கடற்கரையில் அமையவுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தின் பீனிக்ஸ் பறவை போன்று மாதிரி வடிவம் இடம் பெற்ற வாகனம் இடம் பெற்றிருந்தது. அதே போன்று ஒருங்கிணைந்த வேளாண் சேவை  சார்பில் இடம் பெற்றிருந்த வாகனம் காய்கறி, பழங்கள், வாழை மரம், மலர்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது.

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் குடியரசுதினம் மற்றும் சுதந்திர தினத்தன்று குடியரசுதலைவர் விருது அளிக்கப்படும். அந்த வகையில் 2019ம் ஆண்டின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையை சேர்ந்த சூர்யகுமார், தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், தஞ்சையை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. வேளாண் துறை சிறப்பு விருது புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு செட்டியாப்பட்டி கிராமத்தை  சேர்ந்த விவசாயி சேவியருக்கு வழங்கப்படுகிறது.

மேலும் அவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. அண்ணா பதக்கம் பெறும் 3 பேருக்கும், ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும்
சான்றிதழை விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதை தொடர்ந்து விருது பெற்றவர்களுடன் முதல்வர் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.