சென்னை, ஜன. 27:ரெயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. இது தொடர்பாக போதை தடுப்பு பிரிவு போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலையில் வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தியபோது கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். அவை 18 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

இது தொடர்பாக ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கொத்தபள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா (வயது 44), தெலுங்கானா வில் சாலிராக் நகரைச் சேர்ந்த மகேஷ் பிரதாப் (வயது 40) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.