மதுரை, ஜன.27:மதுரை வருகை தந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட முயன்ற வைகோ, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, பெரியார் திராவிடர் கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சுமார் 350 பேர் இன்று மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தோப்பூரில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று வந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரிவினர் கடந்த 3 தினங்களுக்கு முன்பாகவே மதுரையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஐஜி மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் தற்போது ஈடுபட்டி வருகின்றனர்.

இந்நிலையில் உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர் களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலை கட்சிகள், மே 17 இயக்கம் போன்ற பல அமைப்புகளும் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடி எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களையும் வைகோ பறக்கவிட்டார். இதன் பின்னர் கருப்புக்கொடி ஏந்தி வாரு வைகோ தலைமையில் ஆயிரகணக்கனோர் மோடி திரும்ப செல்ல வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.இதை தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டதை கண்ட வைகோ போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வேனில் ஏற்றப்பட்டவர்களை போலீசார் இறக்கி விட்டனர். இந்த சம்பவத்தால் போராட்டம் நடைபெறும் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

இதையடுத்து வைகோ, திருமுருகன் காந்தி, கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.