சென்னை, ஜன.27:திமுக என்றால் ஊழல் கட்சி; ரவுடி கட்சி என்பதை, மக்கள் நன்ரு புரிந்துள்ளனர் என கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கூட்டுறவு விற்பனை இணையம், 3,798 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, உரம், பூச்சி கொல்லி மருந்து, விதைகளை விற்பனை செய்கிறது. கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளன.இதை, அமைச்சர் ராஜு நேற்று துவக்கி வைத்தார். பின், இணைய அலுவலக வளாகத்தில், சில்லரை அங்காடியை திறந்து வைத்தார்.

அதில், கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும், தேன், சாமை, செக்கு எண்ணெய்; மாடி தோட்டங்களில் பயன்படும், உரம், விதைகள் விற்கப்படுகின்றன.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

தொடக்க வேளாண்மைசங்கங்களில், ரசீது வாயிலாக, உரம், விதைகளின் தேவை பட்டியல், கூட்டுறவு இணைய தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டு, அவை அனுப்பி வைக்கப்பட்டன. இதனால், காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது, அவை, கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளதால், இனி, அந்த நிலை இருக்காது. இதனால், விவசாயிகளுக்கு, குறித்த காலத்தில், விதைகள், உரங்கள் கிடைக்கும். முதல்வர் மீது, வீணாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அரசுக்கு கிடைத்திருக்கிற நல்ல பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்.

ஸ்டாலின், என்ன ஜெகஜால கில்லாடித்தனம் செய்தாலும், அவரின் நாடகம் எடுபடாது. தி.மு.க., என்றால், ஊழல் கட்சி; ரவுடி கட்சி. அது, ஆட்சிக்கு வந்தால், நிம்மதியாக இருக்க முடியாது என்பதை, மக்கள் தெளிவாக புரிந்துள்ளனர். அந்த கட்சியுடன், கூட்டணி சேரும் கட்சிகளும் அம்போ தான்.

இவ்வாறு அவர் கூறினார்.