மதுரை, ஜன.27:வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

மதுரையில் இன்று நடைபெற்ற பிஜேபி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வளர்ச்சியின் நாயகன் பிரதமர் நரேந்திர மோடியை தமிழகம் வரவேற்கிறது. மதுரையில் தாமரைகள் மலர மலர உதயசூரியன் எங்களை என்ன செய்ய முடியும். உச்சி சூரியனே எதுவும் செய்யாதபோது, உதயசூரியன் என்ன செய்துவிடும். இரும்புத் தலைவனை மதத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்கள்.

வெளிப்படை ஆட்சி செய்பவரை வெளிநாடு செல்வதாகவும் விமர்சனம் செய்கிறார்கள். பட்டியல் இன மக்களின் எழுச்சிக்கு பணியாற்றி வருபவரை பட்டியல் போட்டு விமர்சிக்கிறார்கள்.

தமிழகத்தில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும். நாங்கள் எந்த தியாகம் செய்தும் 2019-ல் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம். இங்கு கூடியுள்ள இந்த 10 நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த வெற்றியை சமர்பிக்கிறோம்.

பாஜகவின் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்கான முன்னோட்டமாக மதுரை பொதுக்கூட்டம் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பதை இந்த கூட்டம் உறுதிசெய்கிறது என்றார். மேலும், மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் உரையை முடித்தார்.