சுகாதாரத்துறையில் தமிழகம் எப்போதுமே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. உலகத்தரத்துக்கு ஈடான மருத்துவ வசதிகள் தமிழகத்தில் கிடைத்து வருகின்றன. குறிப்பாக சென்னை, மருத்துவ சிகிச்சை நாட்டிலேயே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வட மாநிலங்களைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு வந்து மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு மருத்துவ சிகிச்சை குறைந்த கட்டணத்தில் கிடைப்பதே இதற்கு காரணமாகும். இந்த காரணத்தால் பல நாடுகளிலிருந்தும் இருதய அறுவை சிகிச்சை போன்ற உயிர்காக்கும் சிகிச்சைகளுக்காக இங்கு நோயாளிகள் வருவது அதிகரித்து வருகிறது.

இத்தகைய முன்னோடி மாநிலமான தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற நீண்ட நாளைக்கு முந்தைய அறிவிப்பு தற்போது செயல்வடிவம் பெறுவதற்கு அச்சாரம் போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மதுரை அருகே தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை குறைந்த கட்டணத்தில் இந்த மருத்துவமனையில் கிடைக்கும் என்பதால் தென் மாவட்ட மக்கள் பெரும் பயனடைவார்கள். மேலும், மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய இடங்களில் தலா ரூ.150 கோடியில் கட்டப்பட்ட உயர்தர சிகிச்சைக்கான சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை செயல்படுத்த சுமார் நான்கு ஆண்டுகளாகும் என கூறப்படுகிறது.

உரிய காலத்தில் அந்த மருத்துவமனையை நிறுவி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், தமிழகத்தில் மருத்துவ சேவை மேலும் விரிவடையும். மருத்துவ சிகிச்சைக்காக பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவும் வசதி இருப்பதால் ஏழை, எளிய மக்களும் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு இது வாய்ப்பாக அமையும்.

எனவே, அடிக்கல் நாட்டியதுடன் நின்றுவிடாமல், பணிகளை விரைந்து முடித்து எய்ம்ஸ் மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். பிரதமரின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.