சென்னை, ஜன.29:  தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா 75 விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார். மேலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ‘இளையராஜா 75’ என்ற பெயரில் பிப்ரவரி 2, 3-ம் தேதிகளில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.
ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2-ம் தேதி இளையராஜா விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். மேலும், இளையராஜா 75 என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து விழாவிற்கு வருமாறு அழைத்தனர். அவரும் விழாவிற்கு வருவதாக உறுதியளித்துள்ளார்.
2-ம் தேதி நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்குபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. 3-ம் தேதி இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.