சென்னை, ஜன.29: தொலைக்காட்சிகளில்  சின்னத்திரை, பெரியதிரை நடிகைகளுடன் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி விளம்பரப் படங்களில் நடித்த  சரவணனுக்கு சொந்தமான லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சரவணா ஸ்டோர், ரேவதி ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்த கடைகளின் உரிமையாளர்களின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது.
ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 40 குழுக்களாக பிரிந்து சென்னையில் 72 இடங்களிலும், மற்றும் கோவையில் 2 இடங்களில் சோதனை நடத்தினர்.

ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 25 அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் காலை 7.00 மணிக்கே சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று போலீஸ் பாதுகாப்புடன் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடத்த தொடங்கினர். சென்னையில் தி.நகர், பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் குழும நிறுவனங்களிலும், பெரம்பூரில் ரேவதி டெக்ஸ்டைல்ஸ், சூப்பர் மார்க்கெட், ஜி ஸ்கொயர் லோட்டர்ஸ் குரூப் உள்ளிட்ட இடங்களிலும், கோவையில் பிரபல வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் சரவணாஸ்டோர்ஸ் உரிமையாளர்களின் வீடுகளிலும்  சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றிய விவரம் தெரிய வரும் என்ற போதிலும், பினாமி பெயர்களில் ரூ.20 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை நடைபெற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.  சரவணா ஸ்டோர்சில் நடைபெற்ற  சோதனை காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தி.நகர் மற்றும் பாடியில் உள்ள இந்தக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.