சென்னை, ஜன.29: அண்ணல் காந்தியடிகளின் 72-வது நினைவுநாளையொட்டி நாளை சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும் திருவுருவப் படத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அண்ணல் காந்தியடிகளை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்து இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக திறம்பட பணியாற்றினார்.

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிற வெறியும் இன பாகுபாடம் மிகுந்து காணப்பட்டது. அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்னாளில் அவரை ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்க உதவியது. காந்தியடிகளுக்கு கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காந்தியடிகள் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.சத்தியம், அஹிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார்.

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி நாதுராம் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாளை உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழ் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும் திருவுருவப் படத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.