புதுடெல்லி, ஜன.30:நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளிநாட்டில் சிகிச்சைக்கு சென்றிருப்பதால் இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் விவசாய மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதே போன்று விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான பிரிமியம் தொகையை அரசே செலுத்துவதற்கும், உரம் போன்றவற்றுக்கான மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரொக்கமாக செலுத்துவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தவிர சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் கொண்டுள்ளது. இதே போன்று வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை மசோதாவையும் மத்திய அரசு நிறைவேற்ற எண்ணுகிறது.

பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ள, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதே போன்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவும் நாளை காலை தனியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.