புதுடெல்லி, ஜன.30: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கின் நிதி மோசடி குறித்த அம்சங்களை விசாரித்து வருகிறது.இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். ரூ.10 கோடியை உச்சநீதிமன்றத்தில் செலுத்திய பிறகு கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என
நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் மார்ச் 5,6,7,12ம் தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் முன்புபோல் இல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்; சட்டத்தோடு விளையாட நினைத்தால் கடவுள் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும் என நீதிமன்றம் கடுமையாக கார்த்தி சிதம்பரத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.