சென்னை, ஜன.30:ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடருவதை அடுத்து போராடும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க, வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

தங்களின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் போராட்டத்தை தொடரு வதா, இல்லையா என்பதை குறித்து முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோவின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இன்று அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் இயல்பு நிலை காணப்பட்டது.

ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால், அரசுப்பள்ளிகள்
மற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு சரமாரியாக கேள்விகள் விடுத்தனர்.

உடனே, பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இருமுறை வேண்டுகோள் விடுத்தார். நேற்று, அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைவரும் வேலைக்கு திரும்பி, மக்கள் பணியாற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. ஆனால், கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளவில் பேசிவிட்டதால் முதலமைச்சர் பேச்சு நடத்த மாட்டார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 8-வது நாளாக போராட்டம் நடைபெற்ற போதிலும் மாநில அளவில் 9 சதவீதமே ஆதரவு இருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று 30-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சம்பள தினமாகும். ஆனால், இன்று சம்பளம் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்தபிறகு சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 99% ஆசிரியர்கள் இன்று வேலைக்கு சென்றனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. கோவை, திருப்பூர், நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் இன்று ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 100% பணிக்கு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அரசு பள்ளிகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

அரசு ஊரியர்களை பொருத்தவரையில், 350-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று 100% பேர் பணிக்கு வந்திருந்தனர். பிற அலுவலகங்களிலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இன்றி பணிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.