திருச்சி, ஏப்.7:
திருச்சி அருகே பெயிண்ட் கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தேர்தல் பிரச்
சாரம் நடைபெற இருந்த சமயத்தில் இந்த விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் ரைஸ்மில் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன்.

இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 43). இவர் திருச்சி-தஞ்சை சாலையில் காட்டூர் அருகே நியூபிரியா டிரேடர்ஸ் என்ற பெயரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.  தரை தளத்தில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட பொருட்களுக்கான குடோ னும், முதல் தளத்தில் பொருட்கள் விற்பனையும், 2-வது தளத்தில் மற்றொரு குடோனும் உள்ளது. நேற்று மாலை 5.45 மணி அளவில் தரைதளத்தில் உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள, மளவென வேகமாக பரவியது.

இதில் குடோனில் இருந்த பெயிண்ட் வாளிகள், எலக்ட்ரிக் பொருட்கள் ஆகியவை தீப்பிடித்து எரிய தொடங்கின. உடனே கடையில் முதல் தளத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வருவதாக இருந்தது. இதையொட்டி அங்கு திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து விட்டு, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையம், நவல்பட்டு, பாய்லர் ஆலை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாநகராட்சி குடிநீர் டேங்கர் லாரியிலும் தண்ணீரை கொண்டு வந்து மொத்தம் 5 வாகனங்களில் இருந்த தண்ணீர் மூலம் தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.