எந்த அணியாலும் சொந்த மண்ணில் வெற்றிக்கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் இருந்து வந்த ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டிலயே வென்று வாகைச்சூடிய இந்திய அணி இப்போது அதன் பக்கத்து நாடான நியூசிலாந்தில் பயணம் செய்து வருகிறது.

ஐந்து போட்டிகளை கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் நியூசிலாந்து அணியை துவம்சம் செய்து, தொடரை கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்து தேசத்தில் அந்நாட்டு அணியை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தற்போதுதான் இந்தியா வென்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சவ்ரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக், அனில்கும்ப்ளே, ஜாகீர்கான், ஸ்ரீநாத் போன்ற ஜாம்பவான்கள் இடம்பெற்றிருந்த அணிகளால் முடியாத செயலை விராட் கோலி எளிதாக நடத்திக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே, இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் நிலை குலைந்துப்போயுள்ள நியூசிலாந்தை அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்று வெற்றிக்கொடி நாட்டும் நிலையில் இந்திய அணி உத்வேகத்துடன் உள்ளது.

நன்கு விளையாடிக்கொண்டிருக்கும் கேப்டன்கள் போட்டிகளில் சொதப்புவதையும், நல்ல கேப்டன்கள் விளையாட்டில் சோபிக்காததையும் கண்டிருக்கிறோம். ஆனால் விராட் கோலியைப் பொறுத்தவரை அவர் அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்கிறார். வேகம் காட்ட வேண்டிய நேரத்தில் அதை வெளிப்படுத்தி சக வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறார். இது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களிடையே ஒரு இணக்கமான போக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுவே வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த வெற்றிப்

பயணம் உலகக்கோப்பையை வெல்லும் வரை தொடர வேண்டுமென்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒருமித்த ஆசையாகும்.
தற்போதைய சூழலில் இங்கிலாந்து மட்டுமே இந்திய அணிக்கு கடினமான எதிரணியாக விளங்குகிறது. மற்ற அணிகள் அந்த அளவுக்கு தற்போது வெற்றிப்பெற வேண்டிய நிலையில் இருப்பதாக தெரியவில்லை. அதிலும், இங்கிலாந்தில் உலககோப்பை போட்டிகளில் விளையாடும்போது இதை மனதில் நிலை நிறுத்தி விளையாடினால் வெற்றி நிச்சயம்.