ஆக்லாந்து, ஜன.30: எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சமாளிக்கும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது. எதிர்வருவது இந்திய அணிக்கு சம்பிரதாய போட்டியாகவே இருந்தாலும் கூட, நியூசிலாந்து அணிக்கு அதன் கௌரவத்தை எடைப்போடும் போட்டியாக கருதப்படுகிறது. சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆகாமல் எஞ்சியுள்ள இருப்போட்டிகளிலாவது வென்றாக அந்த அணி கடுமையாக தயாராகி வருகிறது.

அதன்படி, எஞ்சியுள்ள 2 ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆல்ரவுண்டர் பிரேஸ்வெல்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மீடியம் ஃபாஸ்ட் பவுலிங் போடும் நீஷம், பின்வரிசையில் இறங்கி கடைசி ஓவர்களில் அடித்து ஆடக்கூடியவர். அதேபோல ஸ்பின்னர் இஷ் சோதியை நீக்கிவிட்டு ஆஸ்டிலை அணியில் சேர்த்துள்ளனர்.

இதேபோல், பிப்ரவரி 6 முதல் 10-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான நியூசிலாந்து அணியில், வேகப்பந்துவீச்சாளர் பெர்குஷனுக்கு பதிலாக டிக்னரும், வீரர் நீஷம்க்கு பதிலாக பிரேஸ்வெல்லும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆல்ரவுண்டர் டேர்ல் மிட்ஷெல் என்பவர் புதிதாக அறிமுகமாகிறார். நியூசிலாந்து டி20 அணி தேர்வு குறித்து தேர்வுக் குழுதலைவர் கவின் லார்ஸன் கூறுகையில், ” டேர்ல் மிட்ஷெல் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அணி நெருக்கடியான கட்டங்களில் நிதானமாக பேட் செய்யக்கூடியவர், வெற்றிபெற வைக்கும் திறமையான பேட்ஸ்மேன். அதேபோல, டிக்னர் நல்ல வேகப்பந்துவீச்சாளர், துல்லியமாகவும், எதிரணிகளை திணறடிக்கக் கூடியவர், என்றார்.