புதுடெல்லி, ஜன.31: அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தி வருவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

ஏழை மக்களின் நலனுக்காகவே மத்திய அரசு செயல்படுவதாகவும், ஊழலற்ற இந்தியாவை செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

தமது உரையில் அவர் கூறியதாவது:-

நாட்டில் ஒரு குடும்பம் கூட மின்சார வசதி இல்லாமல் வாழக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை – குடியரசுத் தலைவர் இந்த ஆண்டு நமது நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஆண்டு மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளை நாம் பின்பற்றுகிறோம் என்பது அளப்பரிய மகிழ்ச்சி அளிக்கிறது. ஊழலற்ற இந்தியாவை படைக்க நாம் உறுதிபூண்டுள்ளோம். அரசின் நலத்திட்டங்கள் இடையூறின்றி ஏழை, எளிய மக்களை சென்றடைகின்றன. 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய உறுதியற்ற நிலை மாறிவிட்டது. 2014 தேர்தலுக்குப் பின்னர் புதிய இந்தியாவை படைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது

இந்த அரசு ஏழை மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் ஏழைகளை நேரடியாக சென்று சேருகிறது. அந்தவகையில் புதிய இந்தியாவை படைக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளி தென்படுகிறது.

ஜன்தன் திட்டத்தின் மூலம் 34 கோடி புதிய வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள், பெண்கள் தொழில் தொடங்குவதை அரசு ஊக்குவித்து வருகிறது. முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர்.

நாட்டுமக்களின் சுகாதாரத்தில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. இதனை அடையும் நோக்கத்துடன் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தரமான மருத்துவ சிகிச்சை ஏழைகளுக்கு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 4 மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமப்புறங்களுக்கு பெரும் பயன் அளிக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க அரசு பாடுபட்டு வருகிறது. இதற்காக விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனில் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. விளையாட்டு துறையையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான பதக்கங்களை விளையாட்டு வீரர்கள் குவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

மேலும் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அதனால் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட்

ஜனாதிபதியின் உரையை அடுத்து, இன்று அவை ஒத்திவைக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட் மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
நிதியமைச்சர் பியூஷ் கோயல் இதனை தாக்கல் செய்கிறார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.