சென்னை, ஜன.31: பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் சென்னையில் முதன் முறையாக ஸ்மார்ட் டஸ்ட்பின் பயன்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடுஞ உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும்

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1.1.2019 முதல் தமிழ்நாட்டில் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இருப்பினும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களுக்கான பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகமாக உள்ளது. பயன்படுத்தப்பட்ட இந்த பாட்டில்களை பொது இடங்களில் தூக்கி எறியப்படுவதால், அவைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. அதனால் பல்வேறு விதமான நோய்கள் உருவாகி வருவதுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்களில் அடைப்பை உண்டாக்கி சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கவும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பெரும் வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், திரையரங்குளில் நவீன ஸ்மார்ட் டஸ்ட்பின் பயன்பாட்டை இன்று சென்னையில் முதன்முறையாக முதலமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

இந்த நவீன டஸ்ட் பின்-ல் போடப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான அலுமினிய டின்கள் ஆகியவை நசுக்கப்பட்டு, சேகரிக்கப்படும். மேலும், அவ்வாறு போடப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குளிர்பான அலுமினிய டின்களுக்கு இந்த ஆர்விஎம் மூலமாக சலுகை கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகை கூப்பன்களைக் கொண்டு மக்கள் அதில் குறிப்பிட்டுள்ள வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் வாங்கி பயன்பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் டி. சேகர், கோல்டன் ஸ்டார் இன்னொவெஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஹெப்சிபா, அமலன் சாம்ராஜ், இணை – நிறுவனர் உத்சவ் சஹ்னி, முன்னாள் எம்எல்ஏ ஜெ.சி.டி பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.