பல்லாவரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 3 பேர் காயம்

குற்றம் சென்னை

தாம்பரம், ஜன.31:  பல்லாவரத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வடமாநில சுற்றுலா பயணிகள் 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வடமாநிலத்தில் இருந்து 71 பேர் கொண்ட குழு ஒன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளது. அங்கு சுற்றுலாவை முடித்துக்கொண்டு, அடுத்ததாக சென்னையை சுற்றிப்பார்ப்பதற்காக பல்லாவரத்தில் அறையெடுத்து தங்கியிருந்துள்ளனர்.

அந்த வகையில் இந்த குழுவை சேர்ந்த சிலர் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்புவதற்காக இன்று காலை தாம்பரம்-பீச் செல்லும் மின்சார ரெயிலில் ஏறியுள்ளனர். பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அதிக கூட்டம் இறங்கியுள்ளது. அப்போது, கடைசியாக இந்த வடமாநில சுற்றுலா குழுவும் இறங்க முற்படும்போது ரெயில் புறப்பட்டது. இதனால், ரெயிலில் இருந்து அவர்கள் தவறி நடைமேடை மேல் விழுந்துள்ளனர்.

இதில், 2 பெண்கள் உட்பட 3 வடமாநில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். விசாரணையில் அவர்கள் புதுடெல்லியை சேர்ந்த சுமன்லதா (வயது 59), பஞ்சாப் லூதினாவை சேர்ந்த நந்த கிஷோர் (வயது 59) மற்றும் பப்ளி ராணி (வயது 57) என தெரியவந்தது. படுகாயமடைந்த இவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சுமன்லாதாவிற்கு தோள்பட்டையிலும், பப்ளி ராணிக்கு தலையிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் அலுவலக நேரங்களில் சிறிது நேரம் கூடுதலாக ரெயிலை நிறுத்திவிட்டு செல்லுமாறு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.