சென்னை, பிப்.1:ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தயாரிக்க ஆலோசனை கூறி உதவிய நடிகர் அஜித்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளதுடன் கவுரவ ஆலோசகராக பணியாற்ற வேண்டுமென அழைப்பும் விடுத்துள்ளது.

அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10 மாதம் பணி புரிந்தார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தில் இயங்கும் வான்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், நடிகர் அஜித்குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அவரது சிறந்த சேவைக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆளில்லா விமானத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டும், அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும் அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
வருங்காலத்தில் விருப்பம் இருந்தால், அவரது வசதிக்கு ஏற்ப, கவுரவ பதவியில் அஜித் ஆலோசகராக பணியாற்ற வேண்டும் என்றும் அவரை அண்ணா பல்கலை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.