சென்னை, பிப்.1:சென்னை நகரம் விரிவாக்கம் அடைந்து புதிய குடியிருப்புகள் தோன்றியிருப்பதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் 2-வது திட்டம் மேற்கு பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.

108 கி.மீ. தொலைவுக்கு 4 கட்டங்களாக அமைக்கப்பட உள்ள மெட்ரோ 2-வது திட்டத்தின் 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை அமைக்கப்படுவதாக உள்ளது. ஆரம்பத்தில் இந்த வழித்தடம் வடபழனி, சாலிக்கிராமம் பாஸ்போர்ட் அலுவலகம், விருகம்பாக்கம், கோயம்பேடு வழியாக செல்வதாக இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்து விருகம்பாக்கத்தில் இருந்து ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், போரூர், ஐயப்பன் தாங்கல், கரையான்சாவடி வழியாக பூந்தமல்லி பைபாசை
சென்றடையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரம் வேகமாக விரிவடைந்து வருவதை கருத்தில் கொண்டும் மேற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல போக்குவரத்து வசதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது கலங்கரை விளக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரையிலான வழித்தடத்தில் மண்பரிசோதனை நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்ததும் மீனாட்சி கல்லூரியில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை 16 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட உள்ளது.

இந்த வழித்தடம் முழுவதையும் சுரங்கப்பாதையாக அமைத்து 18 ரெயில் நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட புதிய வழித்தடத்தின் மூலம் கோயம்பேடு சாய்நகர் பஸ் நிறுத்தம், விருகம்பாக்கத்தில் உள்ள இளங்கோ நகர் பஸ் நிறுத்தம் ஆகியவை வழியாக செல்லும். மேலும் ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் சந்திப்பு மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் மாறி செல்வதற்கும் வழி செய்யப்படும்.

மெட்ரோ 2-வது திட்டத்தின் கீழ் மாதவரம் முதல் சிப்காட் வரையிலும் 45.5 கி.மீ. தொலைவுக்கும், சிஎம்பிடி முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும் என 108 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் விடப்படும்.