சென்னை, பிப்.1:இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அனுமதித்துள்ளது.

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள் தேதிகளில், இளையராஜா 75 இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதா கிருஷ்ணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக செயற்குழு, பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

புக் மை ஷோ மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. அதுதொடர்பான ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

பாராட்டு விழா எனக் கூறிவிட்டு, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்துகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாக மேற்கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு தொகையென கூறப்பட வில்லை. அதனால் அனைத்தையும் மேற்பார்வையிட நீதிபதி குழுவுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இளையராஜா 75 நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டி கொடுக்க நிதி திரட்டுவதற்காக இளையராஜா நிகழ்ச்சி நடத்த 2016 ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. 2017-18 கணக்கு வழக்குகள் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும்.

அனைத்து உறுப்பினர்களையும் கலந்து ஆலோசித்துதான் இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. சென்ன நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்துக்கு ரூ.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு ரூ. 25 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ’இசை நிகழ்ச்சி நடத்துவது என்று பொதுக்குழு, செயற்குழுவில் கடந்த அக்டோபர் மாதம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் நிர்வாகத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து மீடியாவில் விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடைசி 11 வது மணி நேரத்தில், மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளனர். நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதற்கான அடிப்படை முகாந்திரம் எதுவுமில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இருப்பினும், தயாரிப்பாளர் சங்கம், நிகழ்ச்சியின் வரவு, செலவு கணக்குகளை சரியாக நிர்வகித்து, மார்ச் 3 ம் தேதி நடைபெறும் சங்கத்தின் பொதுக்குழுவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்றே விசாரிக்க வேண்டும் என்று, நீதிபதிகள் என். கிருபாகரன், அப்துல் குத்தூஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை 12. 30 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.