புதுடெல்லி, பிப்.1:அமைப்புச் சாரா பிரிவில், ரூ.15,000 வரை மாத ஊதியம் பெற்ற 60 வயதை கடந்த முதியவர்களுக்கு ரூ.3000 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார்.

சிறு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.6000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால், நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் பியூஸ் கோயல் இன்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து ஆசி பெற்றார்.

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் பிஜேபி அரசின் கடைசி பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ள சிறிய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நேரடி வருமான திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் படி ஒவ்வொரு ஆண்டும்
சாகுபடி காலத்தில் இடுபொருட்கள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு ரூ.6 கோடி மானியமாக வழங்கப்படும்.இந்த தொகை அவர்களது வங்கி கணக்கில் 3 தவணைகளாக செலுத்தப்படும்.இதற்காக பட்ஜெட்டில் ரூ.75 ஆயிரம் கோடி கொடுக்கப்படுகிறது. நாடு தழுவிய அளவில் ரூ12 ஆயிரம் கோடி விவசாய குடும்பங்கள் இதனால் பயன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு விவசாயிக்கும் 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு இது 5
சதவீதமாக உயர்த்தப்படும். பசு வளர்ப்பை மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்திற்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பால் உற்பத்தியை பெருக்க காமதேனு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் 22 வகையான விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

வருமான வரி வரம்பு உயர்வு:

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பு உயர்வு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வரம்பான ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி காரணமாக நாடு முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. 4 ஆண்டுகளில் 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியமும் 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தினக்கூலி பணியாளர்களின் ஊதியம் 42 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அமைப்புச்சாரா தொழில் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பிரதமரின் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் பெற்றவர்களுக்கு 60 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.100 செலுத்த வேண்டும்.

இந்த ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பிரதமரின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பத்து கோடி பேர் வரை பலன் அடைவார்கள்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இந்த ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பணிக் கொடை வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வரிப் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. வருங்கால வைப்பு நிதி செலுத்து வோரின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடியாக அதிகரித்துள்ளது. பி.எப். சந்தாதாரர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் 8 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.