சென்னை, பிப்.1:தமிழக அரசின் பட்ஜெட் வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. 2019-20-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

2019-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 2-ந் தேதி காலை 10.00 மணியளவில் கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தி கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஜனவரி 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 4,5,7 ஆகிய தினங்களில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

இதற்கு பதிலளித்து ஜனவரி 8-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தமிழக அதரசின் பட்ஜெட் வரும் 8-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றையதினம் துணை முதல்வரும்,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-2020-க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் ஒரு வாரம் நடைபெற்று சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு மே மாதத்திற்கு பிறகு துறை ரீதியான மானிய கோரிக்கை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதான தெரிகிறது.