திருவண்ணாமலை பிப். 2: திருவண்ணாமலை அருகே வேனும். லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி உட்பட 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தைச் சேர்ந்த 37 பேர் செய்யாறில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள வேன் மூலம் வந்துகொண்டிருந்தனர்.  செய்யாறை அடுத்த தும்பை கிராமம் அருகே வந்தபோது எதிரில் ஆரணியிலிருந்து சென்னைக்கு  செங்கற்களை ஏற்றி வந்த லாரியுடன் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

மோதிய வேகத்தில் அருகிலிருந்த 7 அடி பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்தன. இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் பெருமாள் (50), இவரது மனைவி அமுலு (40), உமா (38), குப்பு (40), ஜெயசீலா (40), வேனை ஓட்டிவந்த டிரைவர் மணிகண்டன் (25) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்புப்பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த எஸ்பி சிபிச்சக்ரவர்த்தி. செய்யாறு டிஎஸ்பி குணசேகரன், கோட்டாட்சியர் அன்னம்மாள், தாசில்தார் மகேந்திரமணி ஆகியோர் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தினார்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை செய்யார்
சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்து குறித்து செய்யார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்