சேலம், பிப்.2: போராட்டங்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். மக்களின் ஆதரவோடு இது முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். சேலம் கந்தம்பட்டி உள்பட 3 இடங்களில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சேலத்தில் நடந்தது.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பேசியதாவது:-
கிராமசபை கூட்டம் ஏற்கனவே அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பஞ்சாயத்தில் உட்கார்ந்து கொண்டு கிராமசபை கூட்டம் என்று, இவர் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி பேசும்பொழுது, பல்வேறு குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்துகிறார், இந்த ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்கிறார். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டி கூறிக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சியில் அதை தெளிவுபடுத்தவதற்காகத் தான் இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் விளக்குகின்றேன்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, அதை அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து, அவரின் மறைவிற்குப் பிறகு, ஜெயலாலிதாவின் அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, மக்கள் வரவேற்பை பெற்றிருக்கிறோம். அதைப் பொறுக்க முடியாத ஸ்டாலின் அவர்கள் கிராமசபை கூட்டி பேசுகின்ற பொழுது, கிராமம் தான் கோயில் என்று பேசுகிறார். இது ஏற்கனவே நமக்குத் தெரியும், நானெல்லாம் கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவன். அவர் நகரத்தில் இருந்ததால், கிராமம் ஒரு கோயில் என்று இப்பொழுதுதான் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்.

அவரது புது கண்டுபிடிப்பிற்கு, கின்னஸ் சாதனை கிடைத்தது மாதிரி, அவர் அந்த சாதனையை படைத்திருக்கிறார். கிராமத்தில் இருக்கிற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்பதற்காகத் தான் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்திருக்கிறார். கிராமத்தில் பிறந்த, ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த திருமண உதவித் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யார் ஆட்சிக்கு வந்தாலும், அம்மா கொடுத்த திட்டத்தை எவராலும் நிறுத்த முடியாத அளவிற்கு திட்டத்தைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா.
விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு. எந்த சுய உதவிக் குழுவுக்கும் கடன் கொடுக்கவில்லை என்றார்.

அவருக்கு புள்ளி விவரங்கள் தெரியாது. எப்பொழுதும் என்னை பற்றிய நினைப்பு தான் இருக்கிறது. தூங்குவது கூட என்னை நினைத்துக் கொண்டுதான் தூங்குவார் என்று நினைக்கிறேன். எப்பொழுது இந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சரிலிருந்து அகற்ற வேண்டும், அந்த முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு எவ்வித தில்லுமுல்லு செய்யணும், எவ்வித சூழ்ச்சி செய்யணும், யார் யாரையெல்லாம் போராடுவதற்கு தூண்டி விடணும், இந்த நாட்டிலே எப்படியெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்குலைவதற்கு என்னென்ன சூழ்ச்சி வேண்டுமோ அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார். அத்தனையையும் மக்களுடைய ஆதரவோடு முறியடிக்கப்பட்ட ஆட்சி ஜெயலலிதாவினுடய ஆட்சி.

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று கருதி அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனைகளைப் பெற்று, என்னுடைய தலைமையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்திலே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்களும், துறையைச் சார்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.  கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை வருமா என்று ஆய்வு செய்து, அந்த ஆய்வின் அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்கு 158 கோடி ரூபாய் அம்மாவினுடைய அரசு நிதி ஒதுக்கீடு செய்து முன்னெச்சரிகையாக எடுத்திருக்கிறது. ஆகவே, எதுவும் வருவதற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கிறோம். ஆகவே, ஜெயலலிதாவின் அரசைப் பொறுத்தவரைக்கும், வேகமாக, துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பிரச்சினையில்லாமல் செயல்படுகின்ற அரசு ஜெயலலிதாவினுடய அரசு.

வேண்டுமென்றே திட்டமிட்டு, சில அரசியல் சூழ்ச்சியாளர்கள், இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும், இந்தக் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று முனைந்தால் அவர்கள் எடுக்கின்ற அத்தனை முயற்சியும் தோல்வியில் தான் முடியும் என்று இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் அரசு இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, ஜெயலலிதாவின் அரசிற்கு நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.