சென்னை, ஜன.2:  தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த ஒருவர் தனது கூடைக்குள் சிங்கக்குட்டியை பதுக்கிவைத்து கொண்டுவந்ததால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை தாய் ஏர்வேஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக சோதனை செய்தனர்.  அப்போது, சென்னையை
சேர்ந்த பயணி ஒருவர் தன்னுடன் கொண்டு வந்த கூடைக்குள் 6 மாதமே நிரம்பிய சிங்கக்குட்டி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து, அந்த பயணியிடம் கேட்டபோது, இது சிங்கக்குட்டி அல்ல, காட்டுப் பூனைக்குட்டி என்றும், தான் வளர்ப்பதற்காகவே இந்த பூனைக்குட்டியை தாய்லாந்தில் இருந்து விலைக்கு வாங்கிவந்ததாக கூறியுள்ளார். அதற்கான, பில் மற்றும் ஆதாரங்களையும் அவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.  அந்த ரசீதில் விலங்கு என்றே குறிப்பிடப் பட்டுள்ளதால், அது  சிங்கக் குட்டியா? பூனைக்குட்டியா? என்பதை கண்டறிவதில் குழப்பம்  நீடித்தது.

எது எப்படியோ, இந்திய  சட்டப்படி வனவிலங்குகளை வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் கொண்டுவருவதற்கு வனத்துறை, சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் நல சங்கத்திடம் அனுமதி பெற்றுதான் கொண்டுவரமுடியும் என்பதன் அடிப்படையில், அந்த பயணி செய்தது தவறு என்பதால், அவரை சென்னைக்கு செல்ல தடைவிதித்து, அவர் கொண்டுவந்த விலங்குகுட்டியுடனேயே அவரையும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவுசெய்தனர்.

இதனையடுத்து, ஏர்போர்ட்டில் உள்ள தனி அறையில் அவரை அடைத்து வைத்துள்ளதாகவும், இன்று இரவு அதே விமானத்தில் அவரை திருப்பிஅனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.