சென்னை,பிப்.3:விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பவர்களிடம் நாளை முதல் விருப்பமனு பெறப்படவுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முதல் கட்சியாக அதிமுக தொடங்கியுள்ளதால் அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பிஜேபி அரசின் பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்கும் என தெரிகிறது. நாடு முழுவதும் மாநில கட்சிகளுடனான கூட்டணி பிஜேபி, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுவிட்டதால், பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையும் இருதரப்பிலும் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தில் இருமுறை தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி அதிமுகவுடனான கூட்டணியை வெளியிடுவார் என தெரிகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. முதுலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப் பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், நாளை முதல் 10-2-2019 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என கூறியுள்ளனர்.

ஏற்கனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவும், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளவர்களை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்க 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அதிமுக முதல் கட்சியாக தொடங்கியுள்ளதால் அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.