தேர்தலுக்கான தித்திக்கும் பட்ஜெட்

Uncategorized

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் விவசாயிகள், நடுத்தர மக்கள், அடித்தட்டு மக்கள் ஆகிய அனைத்து பிரிவினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

பல்வேறு அறிவிப்புகள், வரிச்சலுகைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த இடைக்கால பட்ஜெட் தேர்தலை மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது மாதச்சம்பளம் பெறும் நடுத்தர பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தித்திக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது. அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 60 வயதுக்கு மேல் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் பட்ஜெட்டின் மிகச்சிறந்த அம்சமாக திகழ்கிறது. வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் ஒரு தொகை இதன் மூலம் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கைவண்டி இழுப்போர், குப்பை பொறுக்குவோர் என பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இது வரப்பிரசாதமாகும். இனிவரும் காலங்களில் இந்த திட்டத்தில் ஓய்வூதியத்தை அதிகரிக்கலாமே தவிர இதை ரத்து செய்ய முடியாத அளவுக்கு சிறந்த திட்டமாக திகழ்கிறது.

சிறு விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.6000 வங்கி கணக்கில் செலுத்தும் திட்டமும் வரவேற்கத்தகுந்ததாகும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.3 லட்சம் கோடி வாராக்கடன் மீட்பு, 5 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடம் ஒழிப்பு, ஜிஎஸ்டி வரி வசூல் சாதனை, கிராமச்சாலைகளுக்கான ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரூ.1.3 லட்சம் கோடி கணக்கில் வராத பணம் வெளிப்பட்டு இருப்பது போன்ற அறிவிப்புகள் காதில் தேன் பாய்வதைபோல அமைந்துள்ளன.
மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம், வங்கிகளை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் கோடி நிதியுதவி, 1 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கழிவு ஆகியவையும் சிறந்த அறிவிப்புகளாகும்.

மொத்தத்தில் இந்த இடைக்கால பட்ஜெட், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.