சென்னை, பிப்.4:சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணிமண்டபம் ஐந்து மாதத்தில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு சிலைகள் திறக்கப்படும் என்று கூறிய அவர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பிப்ரவரி 24ம்தேதி அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப் படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தை யொட்டி அதிமுக தலைமை அலுவலகம்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காலை 10மணிக்கு தலைமை அலுவலகம் வருகை தந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அங்கு அமைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் துணை முதல்வர் பங்கேற்று ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாவது குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மணிமண்டப பணிகள் 5 மாதத்தில் முடிவடைந்து திறக்கப் படும். ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்படும்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதுடன், வரும் தேர்தலில் வெற்றியை அவருக்கு காணிக்கையாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், அம்மா பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும், ஜெயலலிதா பிறந்தநாளை பசிப்பிணி நாளாக அறிவித்து சமபந்தி போஜனம் நடத்த வேண்டும். விலையில்லா மிதிவண்டி, லேப்-டாப் வழங்கும் திட்டங்களுக்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டித்தொட்டி எங்கும் வரலாற்று சாதனையை படைக்கும் எடப்பாடி அரசின் சாதனையை மக்களிடம் எடுத்துச் செல்லவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் எதுவாக இருந்தாலும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெறுவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன.