கொல்கத்தா, பிப்.4:சிட்பண்ட் மோசடி குறித்து விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவகாரத்தையடுத்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கவர்னரிடம் அறிக்கை கேட்டு உள்ளார். சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு அருகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் குவிந்து உள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மோடி அரசுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் வகையில் எனது சத்தியாகிரகம் தொடரும் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் அமளி: மேற்குவங்க மாநில விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று புயலை கிளப்பியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையிலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிபிஐக்கு எதிராக முழக்கமிட்டனர்.

வன்முறை வெடித்தது: 
மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் குறித்து தகவல் பரவியதை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்கள் நடுரோட்டில் தீக்கிரையாக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநில நிலவரம் குறித்து அம்மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிக்கை கேட்டுள்ளார். தற்போதைய பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மாநில தலைமைச்செயலாளர், டிஐஜி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேசரிநாத் திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.