சென்னை, பிப்.4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் 25-வது நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் பொங்கலையொட்டி கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியானது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் 25-வது நாள் கொண்டாட்டம் சென்னை பெரம்பூரில் உள்ள பிருந்தா தியேட்டரில் கடந்த சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் முதல் காட்சியை போன்று ரசிகர்கள் ஆராவாரம் செய்து படத்தை பார்த்தனர்.

இந்நிலையில், வேலூரில் நேற்று தியேட்டரில் 25-வது நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோழிங்கர் ரவி தலைமையில் மண்டல செயலாளர் மோகன், இணை செயலாளர் ரமேஷ் முன்னிலையில் ஏராளமான நிர்வாகிகள் தியேட்டர் முன்பு வந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை குடும்பம் குடும்பமாக படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து உற்சாகமாக கொண்டாடினர். பேட்ட படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.