இளையராஜா விழாவில் ரஜினி ருசிகர பேச்சு

சினிமா

சென்னை,பிப்.4: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2 நாள் பாராட்டு விழா நடந்தது.

இளையராஜா-75 என்ற பெயரில் நடந்த இந்த விழாவை நேற்று முன்தினம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் நடிகர், நடிகைகள் இளையராஜா பாடல்களுக்கு மேடையில் நடனமாடினர்.

நேற்று 2-வது நாள் நிகழ்ச்சியாக இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள்.

ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர். விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு, வெங்கடேஷ் மற்றும் நடிகர்கள் விஜய்சேதுபதி, ரஹ்மான், கருணாஸ், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், பி.வாசு, மணிரத்னம், இசையமைப்பாளர்கள் தேவிஸ்ரீகர் பிரசாத், தினா, எஸ்.பி.ராஜ்குமார், நடிகைகள் சுஹாசினி, ராதா, ஸ்ருதிஹாசன் மற்றும் திரையுலகினர் கலந்துகொண்டனர்.

மேலும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் மற்றும் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது.

பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

மன்னன் படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது. அவர் இசையில், பொதுவாக என் மனசு தங்கம்…, “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்…, ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்.. ஆகிய பாடல்கள் எனக்கு பிடித்திருந்தாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார்.