தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் மீது கட்சி மேலிடத்தில் ஏராளமான புகார்கள் குவிந்ததையடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ, தலைவர்கள் மிகவும் அதிகம்.

ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பியும் ஒரு கோஷ்டி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும், மற்ற கோஷ்டியினர் அவருக்கு எதிராக செயல்படுவதே எப்போதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

பெருந்தலைவர் காமராஜர் இருந்த காலத்திலேயே காங்கிரசில் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லை. காமராஜரும், ராஜாஜியும் கட்சியில் இரு துருவங்களாக இருந்தனர். காமராஜருக்கு பின்னர், ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் ஆகியவை ஒன்றாக இணைந்தபோதிலும், மூப்பனார் தலைமையில் ஒரு கோஷ்டி வலுவாக செயல்பட்டு வந்தது. அப்போதே யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அந்த கோஷ்டி எதிர்த்து செயல்பட்டு வந்தது.

ரசிகர் மன்றம் வாயிலாக செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜிக்கும், மூப்பனாருக்கும் ஆகாமல் இருந்து வந்தது. அதுபோல, வாழப்பாடி ராமமூர்த்தி தலைவராக இருந்தபோது, மூப்பனார் கோஷ்டி தனியாகவே செயல்பட்டு வந்தது. 1996-ம் ஆண்டு மூப்பனார் பிரிந்து தமாகாவை ஆரம்பித்தார். பின்னர் அவரது மகன் வாசன் காங்கிரசில் இணைந்தபோதும் கோஷ்டி பூசல் மேலும் அதிகரித்தது. ஒரு வழியாக அவர் வெளியேறி விட்டபோதிலும், இப்போதும் பல கோஷ்டிகள் செயல்பட்டே வருகின்றன.

ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், கே.ஜெயக்குமார், செல்லக்குமார், சுதர்சன நாச்சியப்பன் என ஏராளமான கோஷ்டிகள் உள்ளன. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராவார். அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதின் மூலம் சிதம்பரத்தின் கை கட்சியில் ஓங்கியிருப்பதை காண முடிகிறது.

இது தேர்தல் ஆண்டாக இருப்பதால் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்துச் செல்ல புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நான்கு செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எச்.வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத் ஆகியோர் செயல் தலைவர்களாக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தலைமை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. அனைவரது ஆலோசனையின்படி கட்சியை வலுப்படுத்துவேன் என்று புதிய தலைவரும் கூறியிருக்கிறார். இது சம்பிரதயமான வார்த்தையா அல்லது செயல்பாட்டுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.