சென்னை, பிப்.5: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 8-ந் தேதி மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் அவை தலைவர் மதுசூதனன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். வரும் 24-ந் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
ஜெயலலிதா பிறந்தநாளை என்னென்ன வகையில் கொண்டாடு வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். மேலும் வரும் மக்களவைத் தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

காலியாக 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.