மதுரை, பிப். 5: ஆசிரியர்களை இட மாற்றம் செய்ததால் எதிர்ப்புதெரிவித்து ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை அடுத்த திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அடுத்த திருமங்கலம் அருகே உள்ள கிராமம் கரிசகாலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 152 மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று திடீரென மாணவ மாணவிகள் ஒன்று திரண்டு செங்கப்படை சிவரகோட்டையில் வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சாலையில் அமர்ந்து பணியில் இருந்த தலைமையாசிரியர் ஆதிநாராயணன், கணித பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம், இடைநிலை ஆசிரியர் வாசுதேவன் ஆகியோரை இடம் மாற்றம் செய்யக்கூடாது.அவர்கள் எங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி வட்டாரகல்வி அலுவலர் மோஸஸ் பெஞ்சமின், திருமங்கலம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மாணவர்கள் சிலர் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு பள்ளிக்கு திரும்பினர். இது குறித்து வட்டார கல்வி அலுவலர் மோஸஸ் பெஞ்சமின் கூறுகையில், பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புக்கு வந்தனர். மதிய உணவு வழங்கப்பட்டன. மீதம் உள்ள மாணவர்கள் நாளை பள்ளி திரும்புவார்கள் என தெரிவித்தார்.